இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

By KU BUREAU

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டை குறிவைத்து நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் களமிறங்கியதால் அவர்களை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை தொடர்ந்து கொன்று வருகிறது. இந்த 2 அமைப்புகளும் ஈரான் ஆதரவுடன் செயல்படுகின்றன. இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பிரதமர் நேதன்யாகு வீட்டை குறிவைத்து லெபனானில் இருந்து நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரதமர் நேதன்யாகு, அவரது மனைலி சாரா இருந்த இடத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கூறும்போது, “லெபனானில் இருந்து இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்த 2 ட்ரோன்களை இடை மறித்து அழித்தோம். ஆனால் மூன்றாவது ட்ரோன் ரேடார் கண்காணிப்பு வளையத்துக்கு கீழாக பறந்து வந்து இஸ்ரேலிய ஹெலிகாப்டரை கடந்து சென்றது” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இடைமறித்து அழிக்கப்படாத இந்த ட்ரோன்தான் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீட்டை தாக்கியதாக சில சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோவை ‘டைம்ஸ் ஆப் இஸ்ரேல்’ ஆன்லைன் ஊடகமும் ஈரான் ராணுவமும் வெளியிட்டுள்ளன.

யாஹியா சின்வர் உள்ளிட்ட ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றுவிட்ட நிலையில் இதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாஹியா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் நேற்று முன்தினம் உறுதி செய்தது.

இஸ்ரேலிய எல்லைக்குள் கூடுதல் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் கூடிய ட்ரோன்களை ஏவுவதன் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று முன்தினம் கூறியது. இந்த அமைப்பின் நீண்ட கால தளபதி ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கடந்த செப்டம்பர் இறுதியில் வான்வழி தாக்குதலில் கொன்றது. இம்மாத தொடக்கத்தில் லெபனான் மீது தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.

இதற்கிடையில் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் உயிரிழப்புக்கு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன போராளிகளுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE