ரபாட்டா: உலகின் மிகப்பெரிய பாலைவன மான சஹாரா ஆப்பிரிக்க கண்டம் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. மிகவும் வறண்ட பகுதியான இங்கு மழை பொழிவதே அரிது. அதிலும் வெள்ளம் ஏற்படுவது அதிசய நிகழ்வு. அந்த வகையில் சஹாரா பாலைவனத்தில் வழக்கமாக ஓராண்டில் பெய்யக்கூடிய மழை இரண்டே நாட்களில் பெய்ததால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மொராக்கோ நாட்டு தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கி.மீ., தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் 24 மணி நேரத்தில் 100 மி.மீ., மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. குறைந்த நேரத்தில் இவ்வளவு மழை பொழிவு கடந்த 30-லிருந்து 50 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என்று மொராக்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய எதிர்பாராத கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. ஜகோரா என்ற பகுதிக்கும் டாடா என்ற இடத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக வறண்டு கிடந்த இந்த ஏறி அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் நிரம்பியுள்ளது. நிரம்பி வழியும் இரிக்கி ஏரியின் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.