சென்னை: விண்வெளியில் நட்சத்திர துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதை இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டறிந்துள்ளது.
வானியல் ஆய்வுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த ‘அஸ்ட்ரோசாட்’ செயற்கைக் கோள் கடந்த 2015 செப்டம்பர் 28-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதே நோக்கத்துக்காக, ‘சந்திரா’ என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா மையம் ஏற்கெனவே கடந்த 1999-ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இந்த 2 தொலைநோக்கி கலன்களும் விண்வெளியில் உள்ள புறஊதாகதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரேகதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, பல அரிய தகவல்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஒரு பெரிய கருந்துளையை சுற்றியுள்ள நட்சத்திர துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதை அஸ்ட்ரோசாட், சந்திரா ஆகிய 2 விண்கலங்களும் ஒருசேர இணைந்து படம்பிடித்துள்ளன. பொதுவாக, விண்வெளியில் காணப்படும் கருந்துளைகள், அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அதனுள் ஏதேனும் பெருவெடிப்பு நிகழும்போது போட்டான் கூறுகள் வெளியேறி எக்ஸ் கதிர்கள் உருவாவது வழக்கம்.
அதன்படி, கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் மாட்டிக்கொண்ட ஒரு நட்சத்திரம் வெடித்து, அதன் சில பகுதிகள் கருந்துளை பாதையில் சுற்றி வருவது 2019-ல் கண்டறியப்பட்டது. இந்நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரம் அதே பகுதியில் சுற்றி வரும்போது, ஏற்கெனவே வெடித்துசிதறிய விண்மீன் எச்சங்களுடன் அவ்வப்போது மோதிக் கொள்வதாக இஸ்ரோ கண்டறிந்துள்ளது. இந்த மோதலின்போது எக்ஸ்ரே கதிர்கள் வெளியேறுவதும் சந்திரா,அஸ்ட்ரோசாட் விண்கலங்கள் வழங்கிய தரவுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.isro.gov.in எனும் இணையதளத்தில் அறியலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
» டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக நடால் அறிவிப்பு
» ரத்தன் டாடாவுக்கு பிரியாவிடை முதல் முரசொலி செல்வம் மறைவு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்