ஈரான் அதிபரான இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஈரான் தேசத்தின் அதிபரான இப்ராஹிம் ரைசி, இன்றைய தினம் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீர் விபத்துக்கு அவரது கான்வாய் ஆளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் இப்ராஹின் ரைசி பயணித்ததா அல்லது பாதுகாப்புக்கு உடன் வந்த ஹெலிகாப்டரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
ஈரான் அதிபர் எங்கே, அவருக்கு என்னவானது என்பது குறித்து ஈரானிய ஊடகங்கள் முன்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அதிபரின் ஹெலிகாப்டர் கான்வாய் விபத்துக்குள்ளானதாக சொல்லப்படும் இடத்தை ஈரான் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் அடையாளம் கண்டு நெருங்கி வருகின்றனர்.
முதற்கட்டத் தகவல்கள் அதிபரின் ஹெலிகாப்டர் கடினமான தரையிறங்கலை எதிர்கொண்டதாக தெரிவித்தன. அதன் பின்னர் உடன் பயணித்த ஹெலிகாப்டர் மட்டுமே விபத்தை சந்தித்தாக தகவல் வெளியானது. அஜர்பைஜான் தேசத்தில் எல்லையில் உள்ள ஈரானின் ஜோல்ஃபா நகருக்கு அருகே நிகழ்ந்த இந்த அசம்பாவிதம் குறித்தான அதிகாரபூர்வமான தகவல்களுக்காக ஊடகங்கள் காத்துள்ளன.
இதனிடையே ஈரான் அதிபருக்கு எதிரான அசம்பாவிதத்தில் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாட் ஏஜெண்டுகளின் கைங்கரியம் இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. அண்மையில் இஸ்ரேலுக்கு எதிராக மிக மோசமான தாக்குதலுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் உத்தரவிட்டிருந்தார். உலகையே அதிரவைத்த அந்த ட்ரோன் தாக்குதலில் இருந்து அப்போதைக்கு இஸ்ரேல் தப்பித்தாலும், தனது பதிலடித் தாக்குதலை தள்ளிப்போட்டு வந்தது. இதனிடையே ஈரான் அதிபருக்கு எதிரான இன்றைய சம்பவத்தில், இஸ்ரேலின் மொஸாட் உளவாளிகள் கைவரிசை குறித்தும் இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.