ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அட்டூழியம்... ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை!

By காமதேனு

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இங்கே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தற்கொலைப் படை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் முழுமையாக இதுவரை பலன் அளிக்கவில்லை. இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிதைக்கப்பட்ட பாமியன் புத்தா சிலைகளின் மிச்சம்

குறிப்பாக கடந்த 2001-ம் ஆண்டு பாமியின் புத்தர் சிலைகளை தாலிபன்கள் வெடிவைத்து தகர்த்தெறிந்த நிலையில், மீதமிருக்கும் அந்த சிலைகளைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு வருகை தந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட பலர் பாமியின் பகுதியில் நேற்று சுற்றிப் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் ஸ்பெயின் நாட்டவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தீவிர விசாரணை

மேலும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கனி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் இழைத்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE