சென்னையிலிருந்து 27 டன் வெடிபொருட்களுடன் இஸ்ரேலுக்கு புறப்பட்ட சரக்கு கப்பலை ஸ்பெயின் நாட்டின் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுத்து அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பதிலடியாக இஸ்ரேல் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக காசா மீது போர் நடத்தி வருகிறது. இதுவரை 35,000 மேற்பட்டோர் இந்த போரால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12,000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல், காசா பகுதி மீது நடத்திவரும் தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்த போதும், ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின் நாடு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகள் செய்வதை ஸ்பெயின் நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் நாட்டிற்கு ஆயுதங்கள் கொண்டு செல்லும் சரக்கு கப்பல்கள் தங்கள் நாட்டின் கடல் வழிப்பாதையை பயன்படுத்தக் கூடாது என ஸ்பெயின் கடுமையாக எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து சுமார் 27 டன் வெடிபொருட்களுடன் இஸ்ரேல் நோக்கி கிளம்பிய சரக்கு கப்பல் ஒன்று வழக்கமாக செல்லும் செங்கடல் பகுதியைத் தவிர்த்து ஆப்ரிக்காவை சுற்றி மத்திய தரைக்கடல் பகுதியை வழியாக சென்றுள்ளது. ஹெளதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அச்சம் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்பெயினுக்கு சொந்தமான கார்டேஜெனா துறைமுகத்தில் ’மரியேன் டேனிகா’ என்ற இந்த கப்பலை வருகிற 21ம் தேதி நிறுத்த அனுமதி கோரி அதன் கேப்டன் அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இஸ்ரேலுக்கு வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை எதிர்க்கும் வகையில் இந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுத்து ஸ்பெயின் நாடு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை உறுதி செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மேனுவல் ஆல்பரஸ், தற்போது வளைகுடா நாடுகளுக்கு தேவை அமைதி மட்டுமே என்றும், கூடுதல் ஆயுதங்கள் தேவையில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.