வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமையவே செய்கிறது. ஆனால் அவற்றில் சில மட்டுமே உலகம் முழுமைக்கும் அவசியமானதாக அமைகிறது. அந்த வகையில் இன்றைய(மே.8) செஞ்சிலுவை தினம் சிறப்பு வாய்ந்தது.
நித்தம் உலகின் ஏதோவொரு மூலையில் நிகழும் இயற்கை பேரழிவுகள் அல்லது செயற்கையான போர்கள் உள்ளிட்ட நெருக்கடிகளால், பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த இக்கட்டின் மத்தியில் கடவுள் போல எவரேனும் வந்து உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தவித்து கிடப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவர்களே செஞ்சிலுவை சங்கத்தினர். கிட்டத்தட்ட கடவுளரின் தூதுவர்களாக அவர்கள் அந்த இடத்தில் அபயமளிப்பார்கள்.
புயல், மழை போன்ற இயற்கை பேரிடரோ, குண்டுகள் சீறும் போர் போன்ற செயற்கை இடரோ, ஒற்றை இரவில் தங்கள் வீடு, வாசல், உடைமைகள் மற்றும் அன்புக்குரியவர்கள் என பலவற்றையும் இழந்து வீதிக்கு வருபவர்கள் நிலை கொடுமையானது. நிலநடுக்கம் போன்றவற்றில் தங்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க வாய்ப்பின்றி நிர்க்கதியாக தவிப்பார்கள். அவர்களின் கரம் பற்றி அந்த நேரத்தில் உதவக்கூடியவர்களாக, அரவணைத்து ஆறுதல் தருவோராக உலக செஞ்சிலுவை சங்கத்தினர் இருப்பார்கள்.
இந்த கடவுளுக்கு நிகரான கடமையாற்றுவதால் சிலுவை அல்லது பிறையை பின்தொடர்வோரால், இன்றைய செஞ்சிலுவை அல்லது செம்பிறை தினம் கொண்டாடப்படுகிறது. செஞ்சிலுவை தினத்தை உள்வாங்கிக் கொள்வது, அவர்கள் வாயிலாகவோ தனிப்பட்ட வகையிலோ அது போன்ற உதவிகளை மேற்கொள்ள நம்மையும் தூண்டும். குறைந்தபட்சம் செஞ்சிலுவை சங்கத்தினருக்கான உதவிகளை ஒருங்கிணைக்கவும் வைக்கும்.
ஆண்டுதோறும் உலக செஞ்சிலுவை தினமானது மே 8 அன்று அனுசரிக்கப்படுகிறது. செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனாண்ட் என்பவரது நினைவாக, அவரது பிறந்த நாளில் செஞ்சிலுவை தினத்தை அனுசரிக்கிறோம். உலகப்போரின் கோரங்களே செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கி இறுகக் கட்டமைத்தன. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, செஞ்சிலுவைச் சங்கம் அமைதியை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டது.
1934-ல், டோக்கியோவில் நடந்த 15-வது சர்வதேச மாநாட்டில், போரின் போது காயமடைந்த வீரர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான கொள்கைகளை கோடிட்டுக் காட்டும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ’ட்ரூஸ் அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தது. 1948-ம் ஆண்டில், செஞ்சிலுவை சங்கங்களின் ஆளுநர்கள் குழு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேசக் குழுவின் நிறுவனர் ஹென்றி டுனான்ட்டின் பிறந்த நாளைக் கொண்டாட முன்மொழிந்தது. செஞ்சிலுவை சங்கம் அப்போது முதல், உலக செஞ்சிலுவை தினமாக ஆண்டு தோறும் மே 8 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு உலக செஞ்சிலுவை தினத்தின் கருப்பொருள் ’நான் மகிழ்ச்சியை வழங்குகிறேன்; நான் வழங்கும் மகிழ்ச்சியே வெகுமதி’ என்பதாகும். செஞ்சிலுவை சங்கத்தினர் முன்னெடுக்கும் இரக்கம், அன்பு, பாசம், ஆதரவு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டும் நாள் இது. நிறுவனத்தின் கொள்கைகள், பணி, மதிப்புகள் மற்றும் செயல்பாடுகளையும் இது நிலைநிறுத்துகிறது.
செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நிதி திரட்டுவதும், மனிதாபிமானத்தை மேம்படுத்த தன்னார்வத் தொண்டுகளை ஏதேனும் வகையில் செய்வதும்தான் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி. இரத்த தான இயக்கங்கள், பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அல்லது முதலுதவி கற்றல் அமர்வுகள் என பலவற்றிலும், அவை தேவைப்படும் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் சென்று சேர்கிறது என்பதை அறியவும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.
இதையும் வாசிக்கலாமே...
குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!
சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!
இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!
அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!