111 பேர் பலியான பரிதாபம்... சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By காமதேனு

சீனாவை நேற்றிரவு உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 111-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வடமேற்கு சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் 6.2 ரிக்டர் என்றளவில் நிலநடுக்கம் நேரிட்டதாக தெரிய வருகிறது. திங்கள் இரவு நிலநடுக்கம் நேரிட்டதை சீனாவின் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

நிலநடுக்கத்தால் தாக்குண்டதில் வீடுகள் சிதிலமானது; மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக குடிமக்கள் இரவில் மேலும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் வீடுகளை துறந்து வீதிகளில் மக்கள் அடைக்கலமானார்கள்.

தகவல்தொடர்பு முடங்கியதால் அதிகாலையில் இருந்தே மீட்பு பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. கட்டிடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று வெளியான தகவலால் மக்கள் மத்தியில் கவலை கூடியுள்ளது. மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் நிலநடுக்கம் நேரிட்டதை மேற்கு ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. ஆனால் பாதிப்பின் வீரியம், பலியானோர் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் துல்லியமாக உறுதி செய்யப்பட இயலவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE