ராணுவத்தால் வழி நடத்தப்படும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி குற்றச்சாட்டு

By KU BUREAU

புதுடெல்லி: ஐ.நா.வின் 79-வது பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் பேசும்போது, ‘‘காஷ்மீரில் இந்தியா பதற்றத்தை அதிகரித்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் இந்தியா முடிவெடுக்கிறது. (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.)’’ என்றார்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியின் முதன்மை செயலர்பவிகா மங்கலானந்தன் நேற்று உரையாற்றினார். அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பேச்சுக்கு தகுந்த பதில் அளிக்கும் வகையில் சரமாரியான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு பேசினார். சபையில் பவிகா பேசியதாவது:

பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஏவிவிடுகிறது. இதை ஒரு தந்திரமாகவே பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தீவிரவாத தாக்குதலை பட்டியலிட்டால் நீளமாக செல்லும். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் சொல்வதெல்லாம் ஆதாரமற்றவை.

தீவிரவாதம் தொடரும் வரையில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு பின்விளைவுகளை கண்டிப்பாக சந்தித்தே ஆகவேண்டும். தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தநாட்டை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் நடைபெற்ற பல தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் ரேகை பதிந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக அது உள்ளது.

தீவிரவாதம், போதைப் பொருள் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு உலகளவில் பெயர் பெற்ற ராணுவத்தால் நடத்தப்படும் நாடுதான் பாகிஸ்தான். இதுபோன்ற குறைகளை கொண்ட நாடு, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை குற்றம்சொல்கிறது. ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்தப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கவும் தேர்தலை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்கிறது. அப்படிப்பட்ட நாடு ஜனநாயகம், வன்முறை பற்றி பேசுவதெல்லாம் வெறும் பாசாங்குதான். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE