இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் கமாண்டர் உயிரிழப்பு: லெபனான் போர் நிறுத்த திட்டம் நிராகரிப்பு

By KU BUREAU

நியூயார்க்: காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனானில் நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில் 92 பேர் உயிரிழந்தனர், 153 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் பிரிவு கமாண்டர் முகமது உசைன் ஸ்ரூர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததை ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக இஸ்ரேல் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதலில், லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் முதல், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே நடைபெற்று வரும் மோதலில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

லெபனானில் தரைவழி தாக்குதலைநடத்த திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல்தெரிவித்ததையடுத்து, இஸ்ரேல்-லெபனான் இடையே 21 நாட்கள் போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ஆகியவை இஸ்ரேலிடம் கூறின. ஆனால், இந்த திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

இது குறித்து ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற நியூயார்க் வந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேலின் நோக்கங்கள் நிறைவேறும் வரை, எங்களின் குண்டு வீச்சு தாக்குதல் தொடரும். இஸ்ரேலின் கொள்கை தெளிவானது. நாங்கள் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து முழு வீச்சில் தாக்குதல் நடத்துவோம். இஸ்ரேலின் வடபகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள், மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டும். இதற்கு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இடையூறாக உள்ளனர். அதனால் எங்கள் இலக்குகளை அடையும்வரை நாங்கள் தாக்குதலை நிறுத்த மாட்டோம். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் லண்டனில் அளித்த பேட்டியில், ‘‘இன்னொரு முழு அளவிலான போர் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். இஸ்ரேலில் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் திரும்ப பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். ராணுவ நடவடிக்கை இதற்கு தீர்வாக இருக்காது’’ என்றார்.

இஸ்ரேலில் இருந்து இந்திய வீரர் மீட்பு: இஸ்ரேல் - சிரியா இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான ஐ.நா படையில் இந்திய ராணுவ வீரர் ஹவில்தர் சுரேஷ் (33) இடம் பெற்றிருந்தார். இவருக்கு ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது. இஸ்ரேல்-லெபனான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் சிகிச்சை பெற்றுவந்த இந்திய வீரர் ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE