இதுவரை 18,500 பேர் பலி... காசாவின் உயரும் உயிரிழப்புகளால் உலக நாடுகள் கவலை

By காமதேனு

இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 18,500 என்பதை தொட்டிருப்பது, உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,500 என்பதை தொட்டுள்ளது. மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் தொடரும் தாக்குதல் காரணமாக, காசாவில் மேலும் உயிர்ப்பலிகள் உயரக்கூடும் என்பது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

காசா

அக்.7 அன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலில் நுழைந்து சுமார் 1200 பேரை கொன்று குவித்ததோடு, 240 நபர்களை பிணைக்கைதிகளாக காசாவுக்கு கடத்திச் சென்றனர். இதனால் ஆக்ரோஷமான இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை பூண்டோடு அழிக்கும்வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று கிளம்பியது. முதலில் வடக்கு காசாவை குண்டு வீசி துவம்சம் செய்த இஸ்ரேல் படைகள், தற்போது தெற்கு காசாவை தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுவினரைவிட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகம் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இடையில் பரஸ்பரம் கைதிகள் பரிமாற்றத்துக்கான தற்காலிக போர் நிறுத்தம் இரண்டொரு முறை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து, காசாவில் வீதிவீதியாக இஸ்ரேல் சல்லடையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் மருத்துவமனைகளை தங்களுக்கான பதுங்குமிடங்களாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதனால் மருத்துவமனைகளை குறிவைத்தும் தாக்குதல்களை தொடர்ந்தது.

சிதிலமான காசா

உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, காசாவின் 36 மருத்துவமனைகளில் தற்போது 11 மட்டுமே பகுதியளவில் செயல்பட்டு வருவதாகவும், பெரும்பாலானவை முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. இஸ்ரேலின் நேரடித் தாக்குதலில் கொல்லப்படுவோர் மட்டுமன்றி, போதிய சிகிச்சை கிடைக்காததில் இறப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும், கொல்லப்படும் அப்பாவிகளில் 40 சதவீதத்தினர் குழந்தைகள் மற்றும் சிறார் என்பதும் உலக மக்களை துயரில் ஆழ்த்தி வருகிறது. ஆனால் இஸ்ரேலை பொறுத்தளவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரை முற்றிலுமாக அழிக்கும்வரை போர் தொடரும் என்பதில் உறுதியாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு துவங்குகிறது!

அதிர்ச்சி... எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!

விஜய் முதல் குஷ்பு வரை.... திரையுலகில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்!

200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்

19 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்... அறுவை சிகிச்சைக்கு பின்பு நேர்ந்த துயரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE