பெய்ரூட்: லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தனது படைகளை தயார் செய்து வருவதாகக் கூறப்படும் நிலையில், லெபனானை விட்டு வெளியேறுமாறு இந்தியா தனது குடிமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிராந்தியத்தில் சமீபத்திய சூழலை கருத்தில் கொண்டு லெபனானுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களை கடுமையாக அறிவுறுத்துகிறோம். மேலும், லெபனானில் ஏற்கனவே உள்ள அனைத்து இந்தியர்களும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எக்காரணம் கொண்டும் லெபனானில் தங்கியிருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அவர்கள் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் எங்கள் மின்னஞ்சல் ஐடி: cons.beirut@mea.gov.in அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128 மூலம் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் முழுவதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே 620க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். லெபனான் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்பைத் தொடர்ந்து அழித்து வருகிறது. இதனையடுத்து அங்கே தரைவழித் தாக்குதலுக்குத் தயாராவோம் என்று இஸ்ரேலின் இராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார்.
» சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் சிறை: பாஜக நிர்வாகியின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பு!
» மானாமதுரை அருகே மீண்டும் தண்டவாளத்தில் கழன்று கிடந்த கிளிப்புகள்: ஒருவரை பிடித்து விசாரணை
பெய்ரூட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இணையதளத்தின்படி, லெபனானில் கிட்டத்தட்ட 4,000 இந்தியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் நிறுவனங்கள், கட்டுமானத் துறை மற்றும் விவசாயப் பண்ணைகளில் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர்.