இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி!

By KU BUREAU

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகபட்சமாக 42.31 சதவீத வாக்குகளை அநுர குமார திசாநாயக்க பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான அவர் வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கடும் இழுபறி நீடித்த நிலையில் இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர் வெற்றி பெற்றார். நாளை (திங்கட்கிழமை) அவர் பதவி ஏற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 32.76 சதவீத வாக்குகள் பெற்று, தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்தார். ரணில் விக்ரம சிங்க 17.27 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். ‘மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்’ என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை தேச மக்கள் புதிய மாற்றங்களை எதிர்பார்த்து அநுர குமார திசாநாயக்கவினை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர். ‘தேசத்தில் புதிய அரசியல் கலாச்சாரம்’’ வேண்டும் என சொல்லி தனது பிரச்சாரத்தில் அவர் மக்களிடம் ஆதரவு கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE