பெய்ரூட்: காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை எதிர்த்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 37 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதக் கிடங்கு, ராக்கெட் குண்டு ஏவுதளங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தன.
இதுதொடர்பாக, தெற்கு பெய்ரூட் நகரில் உள்ள கட்டிடத்தில் ஹிஸ்புல்லா கமாண்டர்களின் ஆலோசனை கூட்டம் இப்ராஹிம் அகில் தலைமையில் நடைபெறுவதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடம் தரைமட்டமானது.
இதில் ஹிஸ்புல்லாவின் ரத்வான்படைப்பிரிவு சீனியர் கமாண்டர் இப்ராஹிம் அகில், ஹிஸ்புல்லா கமாண்டர்கள் 10 பேர் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 59 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு சீனியர் கமாண்டர் ஃபாத் சுகர் கொல்லப்பட்ட சில வாரங்களில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இருவரும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் முக்கிய பங்காற்றினர்.
» தனியாருடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவை: போக்குவரத்து துறை தகவல்
கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்தே, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்திவந்தனர். இஸ்ரேல் பதில் தாக்குதலில் இதுவரை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 483 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
யார் இந்த இப்ராஹிம் அகில்: ஹிஸ்புல்லா சீனியர் கமாண்டரான இப்ராஹிம் அகில் கடந்த 1983-ம் ஆண்டு பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ராணுவ குடியிருப்பு மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர். இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரகத்தில 63 பேரும், ராணுவ குடியிருப்பில் 241 பேரும் உயிரிழந்தனர். இதனால் இப்ராஹிம் அகில் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 7 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
இவர் ஈரானில் ராணுவ பயிற்சி பெற்றவர். கடந்த 1980-ம் ஆண்டுகளில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் பலரை பிணைக் கைதிகளாக கடத்தி வைத்திருந்தார். மிகப் பெரிய ஜிகாதி தலைவராக கருதப்பட்ட இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.