துபாயில் உலக காலநிலை மாற்ற மாநாடு... பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்!

By காமதேனு

துபாயில் நடைபெறும் 28வது உலக காலநிலை மாற்றத்துக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசுகிறார்.

துபாய் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உலக காலநிலை மாற்றத்துக்கான கூட்டு செயல்பாடு கூட்டமைப்பின் 28-வது மாநாடு (சிஓபி 28) நவம்பர் 30-ம் தேதி முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு துபாய் சென்றடைந்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'சிறந்த புவியை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாய் வந்துள்ளேன். மாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறேன்.

பிரதமர் மோடிக்கு துபாயில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

துபாயில் உள்ள இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தார்கள். அவர்கள் அளித்த ஆதரவும், உற்சாகமும் உயிர்ப்பான கலாச்சாரத்தையும், உறுதியான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது' எனப் பதிவிட்டுள்ளார்.

'சிஓபி 28' ல் இன்று நடைபெறும் உலக பருவநிலை உச்சிமாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமர்வாகும். இந்த அமர்வில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இது தவிர ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் மூன்று நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 2023-ம் ஆண்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமயமான ஆண்டாக பதிவாகி இருப்பதாகவும், இதுகுறித்த உடனடி நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்திய சூழலில் துபாயில் காலநிலை மாற்றத்துக்கான உச்சி மாநாடு நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE