மீண்டும் டாப் - 20 கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த அதானி!

By காமதேனு

உலகின் டாப் 20 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீண்டும் இடம்பிடித்திருக்கிறார்.

எலான் மஸ்க்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இயங்கும் புளூம்பெர்க் ஊடகம், உலக கோடீஸ்வரர்களின் டாப் 20 நபர்களின் பட்டியலை 19-வது கட்டமாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தியாளரும், சமூகவலை தளமான எக்ஸ் அதிபருமான எலான் மஸ்க் 228 பில்லியன் டாலர்களுடன் உலக அளவில் முதலிடம் வகிக்கிறார்.

இணையதள வணிக நிறுவனமான அமேசானின் ஜெப் பெசோஸ் 171 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான லக்சுரி குட்ஸ் மேக்கர் (எல்விஎம்ஹெச்) நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 167 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியல்

இந்திய பணக்காரர்களை பொறுத்தவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 89.5 பில்லியன் டாலர்களுடன் உலக அளவில் 13-வது பெரும் பணக்காரராக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக குஜராத் தொழிலதிபரான அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி 66.7 பில்லியன் டாலர்களுடன் 19-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் 150 பில்லியன் டாலர்களுடன் உலகின் 2-வது பெரும் பணக்காரராக இருந்த கவுதம் அதானி, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு மிகப்பெரும் பின்னடைவை சந்தித்து, கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 50 பில்லியன் டாலர்களுடன் 25-க்கும் கீழான இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு அதானி குழுமம் முன்னேறி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE