உலகின் வெற்றிகரமான தொழில் முதலீட்டாளராக கருதப்படும் வரான் பஃபெட்டின் நீண்டகால நண்பரும், தொழில் பங்குதாரருமான சார்லி முங்கர், தனது 99வது வயதில் காலமானார்.
வரான் பஃபெட்டின் பெர்க்சையர் ஹதாவே நிறுவனத்தில் கடந்த 1978-ம் ஆண்டு துணைத்தலைவராக இணைந்த சார்லி முங்கர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவியிலேயே வெற்றிகரமாக நீடித்தார். சிறிய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமாக இருந்த பெர்க்சையர் ஹதாவே-வை பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தமான நிறுவனமாக வளர்த்தெடுத்ததில் சார்லி முங்கரின் பங்கு அளப்பரியது.
கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை சார்லி முங்கரின் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக பெர்க்சையர் ஹதாவே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது நீண்டகால நண்பரும், தொழில் பங்குதாரருமான சார்லி முங்கரின் மறைவு குறித்து வாரன் பஃபெட் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'சார்லி முங்கரின் வசீகரம், அறிவு, பங்களிப்பு ஆகியவை இல்லாமல் பெர்க்சையர் ஹதாவே தற்போது அடைந்திருக்கும் இவ்வளவு பெரிய புகழை எட்டியிருக்க முடியாது. அவரும் நானும் உறுதியான மன நிலையைக் கொண்டவர்கள். எங்களிடையே ஒரு முறைகூட விவாதம் எழுந்ததில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாரன் பஃபெட்டை போலவே, அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தின் ஒமாஹாவில் கடந்த 1924-ல் பிறந்து வளர்ந்தவர். சார்லி முங்கரும், வாரன் பஃபெட்டும் தங்களது இளமை காலத்தில் அதாவது கடந்த 1959-ல் முதன் முதலாக சந்தித்தனர்.
அதுமுதல் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது நட்பு தொடர்ந்தது. சார்லி முங்கரும் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதித்தவர் என்றாலும் தனது செல்வத்தில் பெரும் பகுதியை அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்கிவிட்டார். தான் மறையும் வரை பெர்க்சையர் ஹதாவே-விலிருந்து அதிகாரப்பூர்வமாக சார்லி முங்கர் ஓய்வு பெறவில்லை. வரும் 2024 ஜனவரி 1-ம் தேதி தனது 100-வது வயதை எட்டவிருந்த சார்லி முங்கர் அதற்கு முன்னதாகவே மறைந்துவிட்டார்.