மோடியின் அருணாச்சல் பயணம்... ஆட்சேபித்த சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி!

By வ.வைரப்பெருமாள்

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அருணாச்சல பிரதேச பயணத்துக்கு சீனா ஆட்சேபணை தெரிவித்துள்ளதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள 'சேலா' சுரங்கப்பாதை

பிரதமர் மோடி கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றார். அங்கு உலகின் மிக நீளமான இரட்டை வழி சுரங்கப்பாதையான 'சேலா' சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்.

இந்நிலையில், பிரதமரின் அருணாச்சல் பயணத்துக்கு சீனா ஆட்சேபணை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், “இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட, அருணாச்சலப் பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியை தங்கள் அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அதை உறுதியாக எதிர்க்கிறது 'சாங்னான்' பகுதி சீனாவின் பிரதேசமாகும்" என்றார்.

இதேபோல் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி கூறுகையில், "இந்தியாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லை பிரச்சினையை சிக்கலாக்கும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளின் நிலைமையை சீர்குலைக்கும்" என தெரிவித்துள்ளார்.


அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனா நீண்டகாலமாக உரிமை கொண்டாடுவதை வாங் வென்பின் கூறிய கருத்துகள் பிரதிபலிக்கின்றன.

சேலா சுரங்கப் பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி

இந்நிலையில், சீனாவின் இத்தகைய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பிரதமரின் அருணாச்சலப் பிரதேசப் பயணம் தொடர்பாக சீனா கூறிய கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தியத் தலைவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் செல்வதைப் போலவே அவ்வப்போது அருணாச்சலப் பிரதேசத்துக்கும் வருகை தருகின்றனர். இத்தகைய வருகைகள் அல்லது இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆட்சேபணை தெரிவிப்பது நியாயமானதல்ல.

மேலும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது. இருக்கிறது. எப்போதும் இருக்கும் என்ற யதார்த்தத்தை இது மாற்றாது. சீன தரப்பு பல சந்தர்ப்பங்களில் இந்த நிலையான நிலைப்பாட்டை அறிந்துள்ளது.”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது இந்தியா தனது இறையாண்மையை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. 'சேலா' சுரங்கப்பாதை உள்ளிட்ட திட்டங்களுடன் அந்த பிரதேசத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நிலையில், சீனா இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்த்து வருகிறது. இந்தியாவின் இதுபோன்ற நடவடிக்கைகளை சினமூட்டும் செயல் என அந்நாடு கருதுகிறது. அனைத்து வானிலைகளிலும் பயணிக்கத்தக்க வகையிலும், பாதுகாப்பு தயார் நிலையை அதிகரிப்பதிலும் சேலா சுரங்கப்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை விரும்பத்தகாத ஒன்றாக சீனா கருதுவது, இருநாடுகளிடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சிஏஏ அமல்; பாஜகவையும் அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

உளவுத்துறை சொன்ன தகவல்... அண்ணாமலை, அன்புமணிக்கு குறிவைக்கும் திமுக!

கேரளாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப் படாது: அதிரடியாக அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்!

சரசரவென சரிந்த எஸ்பிஐ பங்குகள்... உச்சநீதிமன்ற உத்தரவால் கடும் வீழ்ச்சி!

பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம்... பாஜகவினர் ஏமாற்றம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE