ஐரோப்பிய சட்ட விதிகளை மீறியதாக உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம் ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் உலக மொபைல் சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் லேப்டாப், ஹெட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகப்பெரிய சந்தை மதிப்பை கொண்ட உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆப்பிள் ஐபோன், இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புக்களில் மிகவும் முக்கியமானதாகும். அதன் பயனர்கள் பெரும்பாலும் ஆப்பிள் மியூசிக் உட்பட ஆப்பிள் வழங்கும் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை நம்பியுள்ளனர். இந்த நிறுவனத்திற்கு ஐரோப்பிய சட்ட விதிகளின் மீறியதற்காக இந்திய மதிப்பில் ரூ.16,500 கோடி அபராதம் விதித்து, ஐரோப்பா ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆப் ஸ்டோரை தாண்டி ஸ்பாட்டிஃபை (Spotify) செயலியைப் பெற மலிவான வழிகள் உள்ளது எனக் கூறி, அதன் பயனர்களுக்கு தங்களின் சேவைகளைத் தடுத்ததாக 2019- ஆம் ஆண்டு ஸ்பாட்டிஃபை வழக்குத் தொடர்ந்தது. பைனான்சியல் டைம்ஸின் அறிக்கையின்படி, ஆப்பிள் மியூசிக்கின் மிகப்பெரிய போட்டியாளரான ஸ்பாட்டிபை குறிப்பிட்ட அந்த நடைமுறையைப் பற்றி புகார் அளித்திருந்தது.
இப்புகார் குறித்து விசாரித்த ஐரோப்பா ஒழுங்குமுறை ஆணையம், ஸ்பாட்டிஃபையின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.16,500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.