உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உண்மையான முயற்சி எடுக்கிறது: ரஷ்ய அதிபர் புதின் கருத்து

By KU BUREAU

மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா , சீனா, பிரேசில் உண்மையான முயற்சிகள் எடுக்கின்றன. அந்த நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு பிரதமர் மோடி கடந்த மாதம் 23-ம் தேதி சென்றார். அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய மோடி, ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்த முக்கிய பங்காற்ற இந்தியா தயார் என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கம் உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புதின் அளித்த பேட்டியில் கூறியதாவது: உக்ரைனுக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆசை இருந்தால், நானும் பேச்சுவார்த்தைக்கு தயார். இப்பிரச்சினையை தீர்க்கஇந்தியா, சீனா, பிரேசில் ஆகியநாடுகள் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. நட்பு நாடுகளை நாங்கள் மதிக்கிறோம். உக்ரைன் விவகாரம் தொடர்பாக நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அதிபர் புதின் கூறினார்.

இந்தியா உதவ வேண்டும்: ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறு கையில், ‘‘ உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியா உதவ முடியும். அதிபர் புதின், பிரதமர் மோடி இடையே நல்ல நட்புறவு உள்ளது. அதிபர் புதின்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க தலைவர்களுடனும் பிரதமர் மோடி நல்ல தொடர்பில் உள்ளார். எனவே, தனது செல்வாக்கை பயன்படுத்தி சர்வதேசவிவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அமைதிக்கான வழியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு எந்த முன்நிபந்தனையும் இருப்பதாக தெரியவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE