29 கி.மீக்கு கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் - ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் சிதையும் செங்கடல்!

By காமதேனு

செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக சுமார் 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 4 மாதங்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காசாவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பிலிருந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏமனை தலைமையிடமாக கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதிகளில் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சுமார் 29 கிலோமீட்டர் நீளத்திற்கு செங்கடலில் எண்ணெய் கொட்டியுள்ளது

அந்த வகையில் கடந்த 18ம் தேதி செங்கடல் பகுதியில் உள்ள பாப் எல் மண்டப் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த பிரிட்டனுக்கு சொந்தமான ரூபிமார் என்ற சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. லெபனான் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த சரக்கு கப்பலில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் நிரப்பப்பட்டிருந்தது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சரக்கு கப்பல் கடுமையாக சேதம் அடைந்ததால், அதிலிருந்து பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால் செங்கடல் பகுதியில் தற்போது பணியாளர்கள் இன்றி அந்த சரக்கு கப்பல் நடுக்கடலில் நின்று கொண்டிருக்கிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் சேதமடைந்த ரூபிமார் கப்பலில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய்

இதனிடையே தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால், சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேற துவங்கியது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இது சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலில் பரவி வருகிறது. விரைவில் இந்த கப்பலில் உள்ள 41,000 டன் உரங்களும் வெளியேறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் செங்கடல் பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்டமாக கப்பலை நடுக்கடலில் இருந்து மீட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் எண்ணெய் படலத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி!

300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!

முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து; விரைவில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!

திருமணம் செய்ய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய தொழிலதிபர்: கூலிப்படையினரும் சிக்கினர்!

காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... 4 சிறுவர்கள் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE