ஜூன்4-ம் தேதி முதல் அமெரிக்காவில் ஜி பே சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தை பெறவும் முடிகிறது. இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாக முடிந்து விடுகின்றன. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஜி பே பயன்படுத்துகிறார்கள்.
டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் ஜி பே பயன்பாடு நடைபெற்று வருகிறது. மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் பல லட்சக்கணக்கானவர்கள் ஜி பே பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஜூன் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் இந்த வசதி நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் என்றும், மற்ற நாட்டினர் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் கூகுள் பே ஆப் சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் அங்குள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால்தான் அமெரிக்காவில் மட்டும் கூகுள் பே ஆப் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.