பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் - 23 பயணிகள் சுட்டுக்கொலை

By KU BUREAU

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானின் முசகேல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முசகேலின் ரராஷாம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகளை தடுத்து நிறுத்திய பயங்கரவாதிகள், பேருந்தில் இருந்து பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி, அவர்களின் அடையாளங்களைச் சரிபார்த்த பிறகு குறிப்பிட்ட இனத்தவரை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். மேலும், தீவிரவாதிகள் 10 வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

பஞ்சாபைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் ஏற்கெனவே பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் பஷ்துன் இனத்தவரை இவ்வாறு படுகொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் இன்றைய சம்பவமும் இதே பாணியில் பலுச் இனத்தவரை விட்டுவிட்டு பஷ்துன் இனத்தவரை மட்டும் கண்டுபிடித்து நடத்தப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் முதல்வர் சர்ஃபராஸ் புக்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் மிருகத்தனத்தை கண்டித்த பாகிஸ்தானின் மத்திய தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார், "முசகேல் அருகே அப்பாவி பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூரத்தை காட்டியுள்ளனர். பயங்கரவாதிகளும் அவர்களுக்கு உதவுபவர்களும் கடுமையான முடிவில் இருந்து தப்ப முடியாது’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இதே பகுதியில், நோஷ்கிக்கு அருகே ஒரு பேருந்தில் இருந்து ஒன்பது பயணிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தீவிரவாதிகள் பயணிகளின் அடையாளங்களை சரிபார்த்த பிறகு குறிப்பிட்ட இனத்தவரை அவர்கள் சுட்டுக்கொன்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE