திடீர் நிலச்சரிவால் சோகம்... தங்கச்சுரங்கத்தில் புதைந்து 68 பேர் பலி: 51 பேர் கதி என்ன?

By காமதேனு

பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தில் சிக்கியுள்ள மேலும் 51 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ டி ஒரோ மாகாணத்தின் மசாரா மற்றும் மிண்டானாவ் தீவின் மாக்கோ ஆகிய நகரங்களுக்கு இடையே ஏராளமான தங்கச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. அவ்வப்போது இந்த தங்கச் சுரங்கங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இருந்த போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக இன்றி, தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் இந்த தங்கச் சுரங்கங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மீட்புப்பணி

இந்த நிலையில் மின்டானாவ் மாகாணத்தின் மசாரா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவின்போது, தங்கச்சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து மூடியது. உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கிய போதும், தொடர்மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரக் காலத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மீட்ப பணிகளின் போது இதுவரை 68 பேரில் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் மீட்பு

இருப்பினும் மாயமான 51 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருப்பதால் அவர்களது உறவினர்கள் பெரும் கவலையோடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் குவிந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பெரும் இயற்கை பேரிடர் சவால்களுக்கு இடையே இந்த மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 51 பேரையும் மீட்கும் வரை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறும் என அந்நாட்டு அரசும், மீட்பு படையினரும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தங்கச் சுரங்கம் மட்டுமின்றி ஏராளமான வீடுகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பணியாளர்கள் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுமார் 8.9 ஹெக்டேர் (22 ஏக்கர்) பரப்பிலான பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் மீட்பு பணிகளில் கடும் தொய்வு இருப்பதாக உறவினர்கள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE