‘அனைத்து அமெரிக்கர்களுக்கான அதிபராக இருப்பேன்’: ஜனநாயக கட்சி வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட கமலா ஹாரிஸ் உறுதி

By KU BUREAU

சிகாகோ: அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டார். அனைத்து அமெரிக்கர்களுக்கான அதிபராக இருப்பேன் என்று உறுதி அளித்தார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவ.5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகள் பலவும் கமலா ஹாரிஸுக்கு கூடுதல் வெற்றி வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிவித்துள்ளன. இந்தநிலையில், தேசிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் கடைசி நாளில் கமலா ஹாரிஸ் ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: "அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளராக உங்களின் நியமனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தேர்தலின் மூலம் கடந்த கால கசப்புகள், பிளவுபடுத்தும் போர்களைக் கடந்த நமது தேசத்தை புதிய பாதையில் முன்னோக்கிச் செலுத்தும் ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக நான் இருப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

ஒரு கட்சியாக, குழுவாக அல்ல ஒட்டுமொத்த தேசமாக புதிய பாதையில் முன்னேறும் வாய்ப்பு நம்முன் உள்ளது. கட்சி மற்றும் தன்நலனுக்கு அப்பாற்பட்டு நாட்டை முன்னிலைப் படுத்தவும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைமுறை மற்றும் அமைதியான அதிகாரப் பரிமாற்றம் போன்ற அமெரிக்காவின் புனிதமான அடிப்படைகளை காப்பாற்ற நீங்கள் எப்போதும் என்னை நம்பலாம்.

ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த எனது தந்தை டொனால்ட் ஜேஸ்பர் ஹாரிஸ் ஒரு துணிச்சல்காரர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எனது தாய் ஷ்யாமளா கோபாலன், தைரியமானவர். என் தாய் எனக்கும் எனது சகோதரி மாயாவுக்கும், அநீதியைக் கண்டு புகார் கூறாமல் அதன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவின் ஒற்றுமைக்காகவும், எதிர்காலத்துக்காகவும் போராடுவேன். " இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

அமெரிக்காவின் அதிபராக 59 வயதான கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுத்தக்கப்பட்டால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE