90 அடி உயர அனுமன் சிலை அமெரிக்காவில் திறப்பு

By KU BUREAU

ஹுஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் ஸ்ரீஅஷ்டலஷ்மி கோயில் உள்ளது.இங்கு 90 அடி உயரத்தில் வெண்கலத்தில் வடிக்கப்பட்ட அனுமன் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரின் சுதந்திர தேவி சிலை (151 அடி), புளோரிடா மாகாணத்தின் பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி)ஆகிய இரண்டுக்கும் அடுத்தபடியாக அமெரிக்காவின் மூன்றாவது உயரமான சிலை இதுவே ஆகும்.ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டிருக்கும் இந்த அனுமன் சிலையின் திறப்பு விழா கடந்த 15-ம் தேதியிலிருந்து 18-ம் தேதி வரை விமரிசையாக நடைபெற்றது.

அனுமன் சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “ராமனும் சீதையும் மீண்டும் இணைய முக்கிய காரணியாக செயல்பட்டவர் அனுமன். ஆகவேதான் இந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுயநலமின்மை, பக்தி, ஒற்றுமை ஆகியவற்றை உருவகப்படுத்தும் சிலை இது. அமெரிக்காவின் பண்பாடு மற்றும் ஆன்மிகத்தின் புதிய அடையாளமாக இந்த அனுமன் சிலை திகழும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE