சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் திடீரென மாரடைப்பால் நள்ளிரவில் உயிரிழந்தது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் லீ கெகியாங். இவர் கடந்த 2013 முதல் 2023 வரை 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக இருந்தவர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக லீ கெகியாங் இருந்தார்.
இதற்கிடையே 68 வயதான அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷாங்காய் நகரில் வசித்து வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சமீப நாட்களில் ஷாங்காய் நகரில் ஓய்வெடுத்து வந்த லீ கெகியாங்கிற்கு நேற்று (அக். 26ம் தேதி) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. நள்ளிரவில் 12.10 மணிக்கு அவர் ஷாங்காயில் உயிரிழந்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு விரைவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அதன் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன. சீனாவில் பல்வேறு சீர்திருத்தங்களை ஆர்வத்துடன் மேற்கொண்ட லீ கெகியாங், நாட்டின் வருங்காலத் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜி ஜின்பிங் இவரை ஓவர்டேக் செய்து அதிபரானார்.
அதன் பிறகே ஜி ஜின்பிங் தலைமையில் அவருக்குக் கீழ் 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார். பெக்கிங் பல்கலைக்கழகத்தில் படித்த பொருளாதார வல்லுநரான இவர், பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரது திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.