இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

By காமதேனு

இஸ்ரேல் குண்டு வீச்சில் தனது மொத்த குடும்பத்தையும் பறிக் கொடுத்த அல்ஜசீரா செய்தியாளர் அல் தஹ்தோ, அடுத்த நாளே தனது பணிக்கு திரும்பியுள்ளார்.

இஸ்ரேல் போரில் குடும்பத்தை இழந்த செய்தியாளர் கதறல்

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரை அறிவித்துள்ள இஸ்ரேல், தொடர் குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக காஸா பகுதியில் இதுவரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருவது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அல் ஜசீரா செய்தியாளர் வெயில் அல் தஹ்தோ பணி நிமித்தமாக போர் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரது மனைவி, மகன், மகள் உட்பட குடும்பத்தினர் காஸா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் குண்டு வீச்சில் தஹ்தோவின் வீட்டின் மீதும் ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்து சிதறியது.

இதில் அவரது மகள், மகன், மனைவி உட்பட வீட்டிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர். இது குறித்த தகவல் தஹ்தோவிற்கு தெரிவிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த உடல்களை பார்க்க வந்த அவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில் அவர் அடுத்த நாளே போர் களத்தில் இருந்து செய்திகளை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’இந்த உலகத்தில் எனது மனைவி, மகன், மகள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களை நான் இழந்துவிட்டேன். எனது பணியை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கு என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை. அந்த கடமையை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தமாட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE