ஹமாஸ் தலைவர்கள் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்... இஸ்ரேல் குற்றச்சாட்டு!

By காமதேனு

ஹமாஸ் தலைவர்கள் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு காசா மக்களின் தலைவிதியை கட்டுப்படுத்துகின்றனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள முக்கிய வீடியோவில், “ காசாவில் இருந்து 1800 கி.மீ தொலைவில் உள்ள தோஹா நகரில் பல ஹமாஸ் தலைவர்கள் சொகுசுவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து ஹமாஸை கட்டுப்படுத்தி இஸ்ரேல் மற்றும் காசா மக்களை நரகத்தில் தள்ளுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது விரைவில் தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஏற்கெனவே காசாவில் உள்ள அல்-ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசாவில் உள்ள பழமையான தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனை, பள்ளி மற்றும் மசூதி போன்ற இடங்களில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ள காரணத்தால் இஸ்ரேல் ராணுவம் இந்த இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE