பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஷ் அல்-அட்ல் நிலைகள் மீது நேற்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளின் எல்லைகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூச்சி மாகாணத்தில் ஜெய்ஷ் அல்-அட்ல் குழுவின் நிலைகள் மீது ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
தனது நாட்டு எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், இதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானை நேற்று கடுமையாக எச்சரித்திருந்தது. ஈரான் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர், 3 பெண் குழந்தைகள் படுகாயமடைந்தனர் என தெரிவித்த பாகிஸ்தான், உடனடியாக ஈரானில் உள்ள தனது தூதரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் இன்று காலை, ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள சப்ஸ் கோஹ் கிராமத்தில் பாகிஸ்தான் இன்று காலை விமான தாக்குதல் நடத்தியது.
இதனால் ஈரான், பாகிஸ்தானின் இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். இந்தியாவை பொருத்தவரை பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தற்காப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்தியா புரிந்து கொண்டுள்ளது" என்றார்.
சீன வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "பதற்றம் அதிகரிக்க வழிவகுக்கும் நடவடிக்கைகளைத் தவிர்த்து, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.