4000 டன் வெடிப்பொருட்கள்... 6000 வெடிகுண்டுகள்... காசாவின் 3600 இடங்களை நாசமாக்கிய இஸ்ரேல்!

By காமதேனு

காசா பகுதியில் தீவிரத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலிய படைகள் அங்கு 3600 இடங்களை குறிவைத்து, 4000 டன் வெடிப்பொருட்களை அடங்கிய 6000 வெடிகுண்டுகளை வீசி உள்ளது.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது, காசா ஹமாஸ் போராளிகள் திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். எல்லைக்குள் புகுந்து பாதுகாப்பு படையினர் முதல் பொதுமக்கள் வரை தாக்கினார்கள். நூற்றுக்கும் மேலானவர்களை இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாக காசாவுக்கு கடத்திச் சென்றனர்.

பொங்கியெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரை குறிவைத்து காசா மீது முழு போர் நடவடிக்கையை அறிவித்தது. அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசும்போது, “இஸ்ரேல் தாக்குதலின் பாதிப்பை காசாவில் பலதலைமுறைகள் உணரும்” என்றார். இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்கள் முதல் வாரத்தை எட்டும் சூழலில், நெதன்யாகு குறிப்பிட்டதன் முழுப் பொருளை சர்வதேச நாடுகள் தற்போது உணர்ந்துள்ளன.

ஹமாஸ் குழுவினருக்கு எதிரான வேட்டை என்ற பெயரில், அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் படைகள் குண்டுகளை வீசின. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் இறந்தனர். காசாவின் சுமார் 3600 இடங்களை குறிவைத்து விமானம் வாயிலாகவும், தரைமார்க்கமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் இதுவரை 6000 வெடிகுண்டுகளை இஸ்ரேல் ராணுவம் காசாவில் வீசியுள்ளது. இதன் மூலம் 4000 டன் வெடிப்பொருட்கள் காசாவை நிர்மூலம் செய்திருக்கின்றன. இந்த தகவலை இஸ்ரேலிய ராணுவமே பெருமையுடன் தெரிவித்திருக்கிறது. காசா மீதான மோசமான தாக்குதலில் இது வரை அங்கு 1200க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருப்பதாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE