அடுத்தடுத்து அதிர்ச்சி... மாலத்தீவில் அதிபர், அரசுத்துறை இணையப்பக்கங்கள் முடக்கம்!

By காமதேனு

மாலத்தீவு அதிபரின் இணையதளம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவு கொடி

தெற்காசியாவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மாலத்தீவு. உலகின் மிகவும் தாழ்வான நாடு என்ற பெயர் மாலத்தீவுக்கு உண்டு. கடல் மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 5 மீட்டர் உயரத்தில் இந்த தீவு அமைந்துள்ளதால், சுற்றுலாத்துறையின் சொர்க்கபூமியாக உள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவே கைகொடுத்து வருகிறது.

அதிபர் முகமது முய்சு

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வந்த மாலத்தீவு, திடீரென அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் மாலத்தீவு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்தது.

கடந்த 1965-ம் ஆண்டு மாலத்தீவுகளுக்கு பிரிட்டிஷ் அரசு விடுதலை அளித்தது. இதையடுத்து தற்போது மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பணியாற்றி வருகிறார். இன்னும் சில நாட்களில் அவர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மாலத்தீவு அதிபர் அலுவலகம்

இந்த நிலையில், மாலத்தீவு அதிபரின் இணையதளம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு பொதுவெளிகளில் தங்களின் தகவலை பகிர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுதொடர்பாக அந்நாட்டு அரசிடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அதிபர் மாளிகை இன்ஸ்டா பக்கத்தில், அதிபர் அலுவலக இணையதளம் தற்போது எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டுள்ளது. இதை உடனடியாக சீர்செய்ய தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது செயல்களைத் தீவிரப்படும் சீனா, தற்போது இலங்கையை கைவிட்டு மாலத்தீவு நோக்கி தனது பார்வையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாலத்தீவில் அரசு இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE