ஜப்பானில் கடந்த 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று மத்திய மாகாணமான இஷிகாவாவில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் காரணமாக, கிழக்கு ரஷ்யா வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள், துறைமுகம் என உள்கட்டமைப்புகள் மிகக் கடுமையாக சேதமடைந்தன.
இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 98 ஆக இருந்தது. அனாமிசுவில் மேலும் இரண்டு பேர் இறந்தது இன்று பதிவானதை அடுத்து பலி எண்ணிக்கை 100- தாண்டி இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தில் 59 பேர் வாஜிமா நகரத்திலும், 23 பேர் சுசுவிலும், மற்றவர்கள் அருகாமை நகரங்களிலும் இறந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இஷிகாவா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி, ஹோன்ஷுவின் இஷிகாவா பிராந்தியத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 211 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கம் காரணமாக, இஷிகாவா பிராந்தியத்தில் சுமார் 23,800 வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 66,400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லை. 31,400-க்கும் மேற்பட்ட மக்கள் அரசு அமைத்துள்ள 357 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் படையினர் ஆயிரக் கணக்கில் இடிந்து கிடக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.