டாக்கா: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் தொடர்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவி வருவதால் அந்நாட்டிலுள்ள அனைத்து விசா வழங்கும் மையங்களும் காலவரையறையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கும் மையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கதேசத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் காரணமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்திய விசா விண்ணப்பிக்கும் மையங்கள் காலவரையறையின்றி மூடப்படுகின்றன. விசாவுக்கு விண்ணப்பிக்கும் அடுத்த தேதி குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அறிவிக்கப்படும். அடுத்த வேலை நாளில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவாரத்தின் தொடக்கத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து டாக்காவில் உள்ள இந்திய தூதரத்தில் பணியாற்றும் முக்கியம் இல்லாத 190 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்தியா அழைத்து வரப்பட்ட பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. என்றாலும் தூதரக அதிகாரிகள் வங்கதேசத்திலேயே இருப்பதாகவும், பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் ஜூன் மாதம் தொடங்கியது. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 5-ம் தேதி வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறி அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
» வளமான, புதிய வங்கதேசத்தை நாம் உருவாக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் கலீதா ஜியா பேச்சு
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 5 பேர் மரணம்: நேபாளத்தில் அதிர்ச்சி
வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அடுத்து அந்நாட்டின் ராணுவத் தளபதி நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், "ராணுவம் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும். யாருக்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டதோ அவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்படும்" என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வேறு யாரை நியமித்தாலும் அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.