வங்கதேசத்தில் இந்து கோயில்கள் எரிப்பு: சிறுபான்மையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்

By KU BUREAU

டாக்கா: வங்கதேசம் முழுவதிலும் பல மாவட்டங்களில் உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், வீடுகள் மீது போராட்டக்காரர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து இந்து, புத்த, கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் நேற்று தெரிவித்துள்ளதாவது:

வங்கதேச நாட்டில் தற்போதைய நிலவரம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஷேக் ஹசீனா பதவி விலகலைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இந்துக் கோயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. ஒரு பெண் தாக்கப்பட்டார். அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு இந்து தலைவர்கள் வன்முறையின்போது உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரின் கவலையை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மத சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடகிழக்கு பஞ்சகர், தினாஜ்பூர், ரங்பூர், போகுரா, தென்மேற்கு குல்னா, படுகாலி, மத்திய நர்சிங்டி, மைமென்சிங், வடமேற்கு லக்கிபூர், வடகிழக்கு ஹபிகஞ்ச் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் இந்துக்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. அப்பகுதிகளில் ஏராளமானோர் கும்பல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். கோயில், கடை, வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.

டாக்காவில் ஒரு இந்திய கலாச்சார மையம் கட்டுக்கடங்காத கும்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்கான் உள்ளிட்ட நான்கு முக்கிய இந்துக் கோவில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் ராணுவத்திடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE