வங்கதேச கிளர்ச்சி: நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விளக்கம் - வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம், போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா, அவரது இந்திய வருகை, தற்போதைய வங்கதேச நிலைமை உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் அறிக்கை வாசித்தார். குறிப்பாக, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் நிலை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
அப்போது அவர், “நமது புரிதல் என்னவென்றால், வங்தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகளின் தலைவர்களோடு ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்தார். ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உடனடியாக அனுமதிக்குமாறும் மிக குறுகிய கால அவகாசத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேநேரத்தில், விமானம் இந்தியாவுக்குள் வருவதற்கான அனுமதியை அதற்கான அதிகாரிகள் கோரினர். இதையடுத்து நேற்று மாலை அவர் டெல்லி வந்தடைந்தார்.
வங்கதேசத்தில் உள்ள நமது தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு புதிய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்பது நமது எதிர்பார்ப்பு. நிலைமை சீரடைந்ததும் அவை வழக்கமான முறையில் செயல்படும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காக பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. நாம் அதை வரவேற்கிறோம்.
» கோவையில் தொடங்கியது இந்தியா - ஜெர்மனி கூட்டு போர் பயிற்சி 'தாரங் சக்தி' - என்ன ஸ்பெஷல்?
கடந்த 24 மணி நேரத்தில் டாக்காவில் உள்ள அதிகாரிகளோடு நாம் தொடர்பில் இருக்கிறோம். இதுதான் தற்போதைய நிலை. நமது நெருங்கிய அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை மேம்படவும், இயல்புநிலை திரும்பவும் இந்த அவை தனது ஆதரவை வழங்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில், காளி கோயில்கள் தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி” - வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் வங்கதேச சூழல் குறித்து விளக்கமளித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்து பேசினார். அதில், "ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஹசீனா இந்தியா வந்து இன்னும் 24 மணிநேரம் கூட ஆகவில்லை. அவர் அதிர்ச்சியில் உள்ளார். அவரது எதிர்கால திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஹசீனாவுடன் பேசும் முன், அவர் குணமடைய அவகாசம் அளிக்க விரும்புகிறோம். அதன்படி, எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய ஹசீனாவுக்கு அவகாசம் அளித்துள்ளோம்." என்றார்.
வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு: வங்கதேச நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்ற தேசியத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட 12-வது நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கலைத்தார்.
முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத் தலைவர்கள் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் வரை கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, "நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அதன்பின் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும்" என அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்திருந்தார்.
திட்டக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான், கடந்த மூன்றாண்டுகளாக எண்ணற்றத் திட்டங்களைத் தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன. மாநில திட்டக்குழுவின் மூலமாக நான் எதிர்பார்ப்பது, புதிய, புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை நான் எதிர்ப்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
சட்டம் - ஒழுங்கு: திமுக அரசு மீது இபிஎஸ் சாடல்: “காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும். மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல் குண்டை வீசியவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
“உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது” - “அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் உண்மையான சமூக நீதி உருவாகும்” என்று சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “18 சதவீதத்தில் நியாயமாக 6 சதவீத இட ஒதுக்கீடு வரவேண்டிய நிலையில், பெயரளவிற்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை செய்துவிட்டு, தன் ஜால்ராக்களை விட்டு துதிபாடு செய்ததுதான் திமுக-வின் பணியாகும். திமுக-வின் ஆதரவு வட்டத்தில் இருக்கின்ற சிலர், தங்களின் ஆதரவாளர்கள் மூலமாக அருந்ததியர் இட உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும், யாரும் அறியாதது கிடையாது.
உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து வந்தபோது 2020-ஆம் ஆண்டு 20 பேர் கொண்ட வல்லுநர் கமிட்டி ஒன்றை அமைத்துச் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து வாதாடி தற்போது 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு வழிவகுத்து இந்தத் தீர்ப்பு வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது அதிமுக அரசுதான். இதையெல்லாம் மறைத்து திமுக ஆடும் கபட நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசு மீது சாடல்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரத்தைச் சார்ந்த விசைப்படகு மூழ்கி அதிலிருந்த மலைச்சாமி என்ற மீனவர் மூழ்கி உயிரிழந்தைக் கண்டித்து ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்துப் பேசும்போது, “குஜராத், கேரளா மீனவர்கள் என்றால் மத்திய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை. தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை,” என்று சாடினார்.
அதேபோல், “தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
ஆயுள் காப்பீடு ஜிஎஸ்டிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வாய்ப்பில் இறுதிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா: பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் வீசி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருந்த ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தச் சுற்றில் தகுதி பெற வேண்டும் எனில் ஒரு வீரர் 84 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும்.
ஒவ்வொரு வீரருக்கும் 6 வாய்ப்புகள் உண்டு. அதில் எது சிறந்த தூரமோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் பி பிரிவில் உள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தான் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன் மூலம் அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த சீசனின் மிகச் சிறந்த தூரம் இது என குறிப்பிடப்படுகிறது.