வங்கதேசத்தில் இந்துக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்: வைரலாகும் பெண்ணின் வீடியோ

By KU BUREAU

வங்கதேசத்தில் இந்துக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனது வீட்டை அழித்ததுடன், குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாகவும் பெண் ஒருவர் கதறியழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணிகளுக்கான இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள ராணுவ நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளார். இந்த நிலையில் மாணவர் போராட்டம் கிளர்ச்சியாக மாறிய நிலையில் தற்போது அந்த வன்முறை இந்துக்களுக்கு எதிராக மாறியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. வீடுகளுக்கு தீ வைப்பு, பெண்களைக் கடத்திச் செல்வது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அத்துடன் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தீ வைக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்து பெண் பாதுகாப்பு கேட்டு கதறியழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், " என் வீட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். எனக்கும்., எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. நாங்கள் அனைவரும் வங்கதேசத்தை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். நான் வங்கதேசத்தின் குடிமகள் இல்லையா? எனக்கு இங்கு வாழ சுதந்திரம் இல்லையா? நானும் எனது குடும்பத்தினரும் ஏன் இந்தியாவில் தஞ்சம் கோர வேண்டும்? நாம் இந்துக்கள் என்பதனாலா?” என்று உணர்ச்சிவசப்பட்டு கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதிகரித்து வரும் வன்முறைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE