தகிக்கும் வங்கதேசம்; பிரதமர் ராஜினாமா: இந்தியாவில் தஞ்சமடைய திட்டம்!

By KU BUREAU

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார்.

ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், நேற்று வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் உயிரிழந்தனர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் 14 போலீஸார் உட்பட 88 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷேக் ஷசீனா அரசுக்கு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று மாலை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், இணைய சேவையும் முடக்கப்பட்டதுடன் 3 நாள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE