புதுடெல்லி: ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா தலைவர்களின் கொலைக்கு பழிவாங்க ஈரான் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்கள் சபதம் செய்திருப்பதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஹெஸ்பொல்லா தலைவர் ஃபுவாட் ஷுகர் இஸ்ரேலால் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த வாரத்தில் கோலன் குன்றுகளில் நடந்த பயங்கர ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி என்று கூறப்பட்டது. இதற்கு பல மணி நேரங்களுக்கு பின்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகரில் கொல்லப்பட்டார். ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா தலைவர்களின் கொலைகள் காசா போரினால் ஏற்பட்ட பிராந்திய பதற்றங்களின் சமீபத்திய நிகழ்வுகளாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகளிடம் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்கும் படியும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு பயணிக்க வேண்டாம் என்றும், லெபனானில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கு அடுத்த நாள் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனம் ஆக.8ம் தேதி வரை டெல் அவிவ்லிருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளது.
இந்தநிலையில், மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்துள்ள பதற்றம் கவலை அளிப்பதாக இருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும் ஹனியாவின் கொலைக்கு உதவி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
» ஸ்மார்ட்போன் மூலம் வறுமையை வென்ற 80 கோடி பேர்: இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை பாராட்டிய ஐ.நா.
» 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு: அதிர்ச்சியளிக்கும் இன்டெல் நிறுவனம்!
இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பான ‘ஆக்ஸிஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ என்று அழைக்கப்படும் தெஹ்ரான் ஆதரவு குழுவின் பிரதிநிதிகளை ஈரான் அதிகாரிகள் புதன்கிழமை சந்தித்து தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக ஹெஸ்பொல்லாவுக்கு நெருக்கானவர்கள் தெரிவித்தனர். ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்களிடமிருந்து ஒரே நேரத்தில் பதிலடி அல்லது ஒவ்வொருவரிடமிருந்து தனித்தனியான தாக்குதல் என இரண்டு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் விளக்கம் அளித்தார்.
கடந்த வாரம் நடந்த கோலன் குன்றுகள் தாக்குதலுக்கான பதிலடியே சுக்ர்ஸ் தாக்குதல் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் அதிகமான விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்று எச்சரித்திருந்தது. தற்காப்புக்காவும், எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளுவதற்கு இஸ்ரேஸ் எப்போதும் தயாராக உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.