புதுடெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்காவும், நாட்டின் கிராமப்புறங்களுக்கு வங்கிச் சேவைகளைக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவதற்காகவும் ஐ.நா. பொதுச் சபையின் (யுஎன்ஜிஏ) தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியாவைப் பாராட்டியுள்ளார்.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பில் (எஃப்ஏஓ), ‘தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகளிடம் பட்டினி இல்லாததை உறுதிப்படுத்துதல்’ என்ற தலைப்பில் டென்னில் பிரான்சிஸ் பேசினார். அப்போது அவர், "டிஜிட்டலைசேஷன் (ஒரு நாட்டின்) விரைவான வளர்ச்சிக்கான அடிப்படையை வழங்குகிறது. உதாரணத்திற்கு, கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
வங்கி அமைப்புகளுடன் ஒருபோதும் தொடர்பில் இல்லாத கிராமப்புற இந்திய விவசாயிகள் தற்போது தங்களின் பரிவர்த்தனைகளை ஸ்மார்ட் போன்கள் மூலம் மேற்கொள்ள முடிகிறது. அவர்கள் தங்களுடையை பில்களை ஆன்லைன் மூலமாக செலுத்துகின்றனர்.ஆர்டர்களுக்கான பணத்தினையும் பெறுகின்றனர். கிட்டத்தட்ட அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால் இந்தியாவில் இணையப்பயன்பாடு பரலவாக உள்ளது.
ஆனால் உலகின் தெற்கில் உள்ள பல பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை. அதனால் அங்கு சமத்துவமின்மை நிலவுகிறது. உலக அளவில் டிஜிட்டலைசேஷனுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு ஆரம்பப் படியாக, இந்த சமத்துவமின்மையை சரி செய்ய சில முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
» 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு: அதிர்ச்சியளிக்கும் இன்டெல் நிறுவனம்!
» இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை
கடந்த பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு டிஜிட்டலைசேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கத் தொடங்கின. யுபிஐ இதில் முக்கிய பங்காற்றின.
ஜன்தன், ஆர்தார் மற்றும் மொபைல் மூலமாக டிஜிட்டல்மயமாக்கலை ஏற்றுக்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். இந்த முயற்சியின் கீழ், கிராமப்புற இந்தியாவில் உள்ளவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வங்கிக்கணக்குகளைத் தொடங்கி உள்ளனர்.
வங்கிக்கணக்குகள் ஆர்தார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப்பயன்படுத்திக்கொள்ளவும் அவற்றின் பணப்பலன்களை நேரடியாக தங்களின் வங்கிக்கணக்குகள் மூலம் பெறவும் முடியும்.