புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், என்விடியா மற்றும் ஏஎம்டி ஆகியவற்றில் இருந்து பலத்த போட்டியை எதிர்கொண்டுள்ளது. அதற்காக நிறுவனத்தை தக்கவைக்க லே-ஆப் நடவடிக்கைககளை ஏற்கெனவெ எடுத்துள்ளது. அத்துடன் அதன் 1.2 லட்சம் ஊழியர்களில் 15,000 முதல் 18,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் 10 பில்லியன் டாலர்களை சேமிக்க இன்டெல் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதனை இன்டெல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி பாட் கெல்சிங்கர். ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஜூன் மாத காலாண்டில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இழப்பை சந்தித்தது. இதையடுத்து நடப்பாண்டு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 83 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செலவைக் குறைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இன்டெல் கடந்த ஆண்டு இறுதியில் 1,24,800 பணியாளர்களைக் கொண்டிருப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அறிவித்துள்ள பணிநீக்க நடவடிக்கைகள் சுமார் சுமார் 18,000 பேரின் பணிகளைப் பறிக்கும் என கருதப்படுகிறது. இதற்காக பணியாளர்கள் தாமாக முன்வந்து வேலையை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்க நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம். அவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு, இன்டெல் நிறுவனத்தில். 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து,தற்போது பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் அந்த றிறுவனம் இறங்கியுள்ளது ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.