விவாகரத்துக்கு விண்ணப்பித்த மகளின் கால் துண்டிப்பு: பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்

By KU BUREAU

கராச்சி: கணவன் கொடுமைப்படுத்தியதால் விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்ணின் காலை கோடாரியால் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் துண்டித்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் குல் டவுனில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சோபியா படூல் ஷா என்ற பெண்ணை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அத்துடன் குழந்தைகளை அவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியாக குழந்தைகளைக் கவனிக்க முடியால் சோபியா தவித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் கூறியும் அவர்கள், மருமகனைக் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது கணவரை விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் மனுவை சோபியா தாக்கல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சையத் முஸ்தபா ஷா மற்றும் அவரது மாமாக்கள் சையத் குர்பான் ஷா, எஹ்சான் ஷா, ஷா நவாஸ் மற்றும் முஷ்டாக் ஷா ஆகியோர் கோடரியால் சோபியாவை வெட்டியுள்ளனர்.

இதில் அவரது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை போலீஸார் மீட்டு நவாப் ஷா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விவாகரத்து வழக்கை வாபஸ் பெற மறுத்ததால், கோடரியால் சோபியா வெட்டப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளது.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நவ்ஷாரோ ஃபெரோஸின் மூத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் முஷ்டாக் ஷா என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கராச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE