முதியோர் இல்லத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலியான பரிதாபம்

By KU BUREAU

குரோஷியாவில் முதியோர் இல்லத்திற்குள் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குரோஷியா நாட்டின் ஜாக்ரெப்பில் இருந்து கிழக்கே 129 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாருவார் நகரில் முதியோர் இல்லம் உள்ளது. இந்த நிலையில் இந்த முதியோர் இல்லத்திற்குள் நேற்று புகுந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இதன்பின் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோஷியா காவல் துறையினர், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் தற்போது 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குரோஷியா காவல் தலைவர் நிகோலா மிலினா கூறுகையில், " துப்பாக்கிச்சூட்டில் இல்லத்தில் தங்கியிருந்த 5 பேரும், ஊழியர் ஒருவரும் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர். அவர் ஓய்வு பெற்ற ராணுவ போலீஸ் அதிகாரியாவார். உணவு விடுதியில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர், 1973-ல் பிறந்தவர் என்றும், 1991-1995 குரோஷியாவில் நடந்த போரில் முன்னாள் போராளி என்றும், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களில் ஒருவரின் உறவினர் என்றும் உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவர் எதற்காக 6 பேரை சுட்டுக் கொன்றார் என்பதற்கான காரணத்தை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு குரோஷியா பிரதமர் ஆண்டிரெஜ் பிளென்கோவிக் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முதியோர் இல்லத்திற்கு துணை பிரதமர் தவோர் பொஜினோவிக், சுகாதார அமைச்சர் விலி பெரோஸ் உள்ளிட்டோர் செல்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் குரோஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE