நான் பிரதமராக இருந்தபோது அவரிடம் தான் அதிகாரங்கள் இருந்தன: கொதிக்கும் இம்ரான் கான்!

By காமதேனு

தான் நாட்டின் பிரதமராக இருந்தபோது முற்றிலும் உதவியற்ற நிலையில் இருந்ததாகவும், ஏனெனில் அதிகாரத்தில் இருந்த உண்மையான மனிதர் முன்னாள் இராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா எனவும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, ராணுவ ஜெனரல் பஜ்வா மற்றும் சில மூத்த ஐஎஸ்ஐ அதிகாரிகளை இம்ரான் கான் குறிவைத்து வருகிறார்.

இது தொடர்பாக பேசிய இம்ரான் கான், "ஜெனரல் பாஜ்வா தான் அதிகாரத்தில் இருந்த உண்மையான மனிதர். அவர் தேசிய ஊழல் எதிர்ப்பு அமைப்பை கட்டுப்படுத்தினார். எந்த அரசியல்வாதியை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்தார். ஊழல்வாதிகள்கள், ஷெரீப்கள் மற்றும் சர்தாரிகளுக்கு எதிரான வழக்குகள் இறுதி கட்டத்தை அடைந்தபோது, அவற்றை முடிவுக்கு கொண்டு செல்ல ஜெனரல் பஜ்வா அனுமதிக்கவில்லை.

மெகா பணமோசடி வழக்கில் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்களான ஹம்சா மற்றும் சுலேமான் ஆகியோரை ஜெனரல் பஜ்வா காப்பாற்றினார். நான் பிரதமராக இருந்தாலும் முற்றிலும் உதவியற்றவனாக இருந்தேன்" என்று கூறினார்.

பஜ்வா தனது அரசாங்கத்திற்கு எதிராக "டபுள் கேம்" விளையாடியதாகக் குற்றம் சாட்டிய இம்ரான் கான், 2019ல் பஜ்வாவின் பதவிக் காலத்தை நீட்டித்ததன் மூலம் "பெரிய தவறு" செய்துவிட்டதாகவும் கூறினார். பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக இருந்த கமர் ஜாவேத் பஜ்வா நவம்பர் 29-ம் தேதி ஓய்வு பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE