பாகிஸ்தான் தேசத்துக்கான முக்கிய முடிவுகள் பிரிட்டனில் எடுக்கப்படுவதற்கு எதிராக மற்றுமொருமுறை ஆவேசம் கண்டிருக்கிறார் இம்ரான் கான். பாகிஸ்தானின் ராணுவ தலைமையை தீர்மானிக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பின் பிரிட்டன் முகாம், நாட்டின் அதிகாரபூர்வ ரகசிய சட்டங்களுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டும் இம்ரான் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உதவியையும் நாடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
படுகொலை தாக்குதலில் உயிர் பிழைத்திருக்கும் ’பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி’யின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், உத்வேகத்துடனான தனது அடுத்த இன்னிங்ஸை அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார். இம்ரானின் உயிருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலும், அந்த நிலையிலும் அவர் தொடரும் அரசியல் ராஜபாட்டையும் பாக். மக்கள் மத்தியில் அனுதாபத்தையும், அபிமானத்தையும் ஒருசேர கூட்டியிருக்கிறது. இந்த அனுதாபத்தை அதிகரிக்க மருத்துவமனையில் இருக்கும் இம்ரானின் சிகிச்சை நடைமுறைகளைக்கூட அவரது ஆதரவாளர்கள் வீடியோவில் பரப்பி வருகின்றனர்.
தன் மீதான துப்பாக்கிச் சூடு காரணமாக, தடைபட்டிருந்த தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கிய பேரணியை தொடர்ந்து முடுக்கி விட்டிருக்கிறார் இம்ரான். பேரணியின் இடையே நேரடி வீடியோ ஒளிபரப்பு வாயிலாக, மருத்துவமனையில் இருந்தவாறு தொண்டர்களுக்கு தெம்பூட்டியும் வருகிறார். இம்ரானின் அவ்வாறான உரைகளில் ஆட்சியாளர்களுக்கு எதிரான வேகமும், கணப்பும் அதிகரித்திருக்கிறது.
இம்ரானின் உரையில் அதிகம் மெல்லப்படும் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தற்போது 5 நாள் பயணமாக பிரிட்டனில் முகாமிட்டிருக்கிறார். அங்கே வீற்றிருக்கும் அவரது அண்ணன் நவாஸ் ஷெரீப்பிடம் ராஜாங்க ஆலோசனைகளை பெற்று திரும்புகிறார். பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைமை குறித்தும், அதிகரிக்கும் இம்ரானின் ஆதரவு குறித்தும் அங்கே அண்ணனுடன் தீவிரமாக கலந்து வருகிறார் ஷெபாஸ். தம்பியை பொம்மை பிரதமராக பாகிஸ்தானில் அமரவைத்து, பிரிட்டனில் இருந்தவாறு ஆட்சி செலுத்தும் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக இம்ரான் கான் இங்கே தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.
ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். சிறுநீரக சிகிச்சைக்காக வளைகுடா தேசம் சென்றவர், கரோனா முடக்கத்தை காரணம் காட்டி பிரிட்டனில் தங்கி விட்டார். அங்கிருந்தபடி பாகிஸ்தான் அரசியலிலும் நவாஸ் களமாடி வருகிறார். தனது அமெரிக்க லாபி உதவியோடு இம்ரான் கானுக்கு நெருக்கடிகளை அதிகரித்து வெளியேற்றியதும், தம்பி ஷெபாஸை பிரதமராக நியமித்ததும் நவாஸின் அரசியல் முதிர்ச்சியில் விளைந்தவை என்கிறார்கள். ராணுவ தலைமையுடன் சிநேகம் பாராட்டுவது, இம்ரானின் எதிர் கட்சிகளை ஒருங்கிணைத்தது என சகலமும் பிரிட்டன் நவாஸின் லகானில் கட்டுப்பட்டவை. இவற்றுக்கு எதிராகத்தான தற்போது இம்ரான் கிளர்ந்திருக்கிறார்.
‘எந்த நாட்டுக்கும் நாங்கள் எதிரியல்ல. காஷ்மீர் பிராந்தியத்தில் சுமூகம் விளைந்தால் இந்தியாவுடனும் நட்பில் நீடிப்போம். அதே வேளையில் எந்த நாட்டுக்கும் பாகிஸ்தானியர்கள் அடிமை அல்ல. பாகிஸ்தானை ஆளும் அதிமுக்கிய முடிவுகள் அனைத்தும் பிரிட்டனில் எடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று முழங்கி வருகிறார் இம்ரான் கான். பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தை நினைவுகூரும் இம்ரானின் இந்த முழக்கத்துக்கு பாக் மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைக்கிறது. அதிலும் ’நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, அயல் தேசத்திலிருந்து பாகிஸ்தானை ஆள்வதா?’ என்ற இம்ரானின் நுணுக்கமான கேள்வி பாக். உதிரி கட்சிகளையும் யோசிக்க வைத்திருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைவரான ஜாவேத் பஜ்வா நவ.29 அன்று ஓய்வு பெற இருக்கிறார். அந்நாட்டை பொறுத்தவரை பிரதமருக்கு இணையான செல்வாக்கு ராணுவ தலைமைக்கும் உண்டு. அசந்தால் ஜனநாயக ஆட்சியாளர்களை தூக்கியெறிந்துவிட்டு ராணுவ ஜெனரல்கள் அங்கே ஆட்சி நடத்த ஆரம்பித்து விடுவார்கள். எனவே ராணுவ தலைமை பதவியில் தமக்கு அனுகூலமானவர்களை நியமிக்கவே ஆட்சியாளர்களும், ஆட்சியை பிடிக்க விரும்புவோரும் துடிப்பார்கள்.
ராணுவ தலைவர் பதவியில் எவரை நியமிக்கலாம் என்பதை விரைவில் நவாஸ் ஷெரீப் தீர்மானிக்க இருக்கிறார். அந்த முடிவும் புதிய ராணுவ தலைமை தளபதியும் தனக்கு எதிராக அமையக் கூடாது என்பதில் இம்ரான் எச்சரிக்கை காட்டுகிறார். எனவே ஷெபாஸ் - நவாஸ் இடையே நடக்கும் பிரிட்டன் நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார் இம்ரான் கான். மக்கள் மன்றம் - நீதிமன்றம் ஆகிய இரண்டு மட்டுமே இம்ரானின் இப்போதை நம்பிக்கைகள். அவரது பேரணி இஸ்லாமாபாத்தை எட்டும்போது இம்ரானின் நம்பிக்கைகள் இறுக இருக்கின்றன.