‘எங்களுக்கு எரிபொருள் தடையில்லாமல் கிடைப்பது உலகத்துக்குத்தான் நல்லது!’

By காமதேனு

உக்ரைன் - ரஷ்யா போரை ஒட்டி, எரிசக்தி விநியோகத்தில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் தீர்வுகாண வேண்டும் என்றும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தில் உள்ள நுஸா டுவா நகரில், இன்று (நவ.15) மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினராக இருக்கிறது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் உள்ளிட்ட தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

தொடக்க நாளான இன்று இம்மாநாட்டில் உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு தொடர்பான அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, உக்ரைன் போர், பருவநிலை மாறுதல், கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. இதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கசப்புடன் கவனித்துவருகின்றன. அவ்வப்போது இந்தியா மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்திவருகின்றன.

இந்நிலையில், தனது உரையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் பிரதமர் மோடி. “இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடு என்பதால், இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. எனவே, எரிபொருள் விநியோகத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டாம். எரிபொருள் சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர், உலகில் பேரழிவை ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், உக்ரைனில் போர் நிறுத்தம் கொண்டுவர இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE