ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் பெருமளவிலான தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு துரத்த, அமெரிக்க ஐடி நிறுவனங்கள் அவர்களை அரவணைக்கத் தொடங்கியிருக்கிறது.
ட்விட்டர், மெட்டா(பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனம்) போன்ற உலகப்பெரும் டெக் நிறுவனங்கள் வரலாறு காணாத வகையில் பணியாளர்களை வெளியே அனுப்பி வருகின்றன. எலான் மஸ்க் கைக்கு மாறியதிலிருந்து ட்விட்டர் நிறுவனத்தில் பணிபறிப்பு தொடர்ந்து வருகிறது. மெட்டா நிறுவனம் தம் பங்குக்கு அதிரடியாக 11 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த வரிசையில் சிறிதும் பெரிதுமாக டெக் நிறுவனங்கள் களையெடுப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றுக்கு காரணமாக பெருந்தொற்று பரவலில் உருக்குலைந்த உலகப் பொருளாதாரம், சர்வதேசளவிலான மந்த நிலை, உக்ரைன் போர்ச் சூழல், புதிய மாற்றங்களுக்கு நிறுவனங்கள் தயாராவது, நிறுவனத்தின் நிலுவைக் கடன்கள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் என நீளமான பட்டியலை இந்த நிறுவனங்கள் கற்பிக்கின்றன. ஆனால் வேலை இழந்தோர் பாடு சொல்லிமாளாது. பெரும் டெக் நிறுவனத்தின் பணியாளர் என்ற வகையில் பெருமளவிலான ஊதியத்தை பெற்று வந்த பணியாளர்களுக்கு திடீர் பணி பறிப்பு நிலைகுலையச் செய்திருக்கிறது. வேலை பறிப்பின் நிதர்சனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது அவர்கள் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் பலவும் பணியிழந்த டெக் பணியாளர்களை வேலையில் அமர்த்த முன் வந்திருக்கின்றன. இந்த ஐடி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கான பணியாளர்களை தனியார் வேலைவாய்ப்பு மையங்கள் வாயிலாகவே தேர்ந்தெடுக்கும். இந்த மையங்கள், பணியிழந்த டெக் பணியாளர்கள் மீது திடீர் கரிசனம் கொண்டுள்ளன. ஐடி நிறுவனங்களுக்கு தேவையான டெக் பணியாளர்கள் தற்போது வேகமாக வேலையில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
டெக் நிறுவனத்தில் பெற்ற ஊதியத்தை எதிர்பார்க்க கூடாது என்ற நிபந்தனையுடன், ஆறு மாதம் முதல் 1 வருடம் வரையிலான தற்காலிக ஊழியராகவே பணியில் சேர்க்கின்றன. பணித்திறன் அடிப்படையில் அவர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளன. அந்த பணியாளர்களும் இவ்வாறாக கிடைக்கும் அவகாசத்தில் தமக்கான டெக் நிறுவன பணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து டிவிட்டர் போன்ற நிறுவனங்களில் சேர அண்மையில் சென்றவர்கள், ஓரிரு தினங்களிலேயே பணியிழந்து சந்திக்கு வந்துள்ளனர். இவர்களைப் போன்றவர்களுக்கு ஐடி நிறுவனத்தின் புதிய பணி வாய்ப்பு வரப்பிரசாதமாகி இருக்கிறது. ஹெச்1-பி விசாவில் அமெரிக்கா சென்றவர்கள் பலரும் இந்த உதவியால் பெருமூச்சு விடுகிறார்கள். இந்த விசா அடிப்படையில் அமெரிக்கா சென்றவர்கள் பணியிழந்த 60 நாட்களில் அவர்களின் விசா தாமாக காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.