ட்ரம்ப், புஷ், டெஸ்லா... ட்விட்டரில் போலி கணக்குகள்: எலான் மஸ்க்கால் விளையும் இம்சைகள்!

By சந்தனார்

ட்விட்டர் கணக்குகள் குறித்த சரிபார்ப்புக் கொள்கையில், பணத்துக்காக சமரச நிலைப்பாட்டை எடுத்த எலான் மஸ்க், அதற்கான விளைவையும் எதிர்கொண்டிருக்கிறார். ஆம்... அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், டொனால்டு ட்ரம்ப் போன்ற ஆளுமைகளின் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கும் போலி ட்விட்டர் கணக்குகளைத் தொடங்கி கலங்கடித்திருக்கிறார்கள் இணைய குசும்பர்கள். பகடி செய்யும் கணக்கு எனப் பகிரங்கமாக எழுதுங்கள் என்று எலான் மஸ்க்கே கெஞ்சும் அளவுக்கு நிலைமை படுமோசமாகியிருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு பல குழப்பங்களுக்கும் வழிவகுத்திருக்கிறார் எலான் மஸ்க். மாதம் 7.99 டாலர் (இந்திய மதிப்பில் 645 ரூபாய்) கட்டணமாகச் செலுத்தினால், ப்ளூ டிக் எனும் சரிபார்ப்பு அம்சம் இல்லாமலேயே ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கலாம் என்று அவர் விதித்த நிபந்தனை அந்தக் குளறுபடிகளில் ஒன்று. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பியவர்களைக் கேலி செய்து ட்வீட் செய்தார் மஸ்க். எதிர்ப்புகள், விமர்சனங்கள் என அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு அந்த வசதியை, கடந்த புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்திவிட்டார்.

எதிர்பார்த்தது போலவே, எடுத்த எடுப்பிலேயே பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கிவிட்டன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பெயரில் தொடங்கப்பட்ட போலி கணக்கில், இராக்கியர்களைக் கொன்ற அனுபவத்தை நினைத்து ஏங்குவதாகப் பகடிப் பதிவும் எழுதப்பட்டது. அடுத்து, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேய்ர் பெயரில் தொடங்கப்பட்ட போலி கணக்கு, புஷ்ஷின் ட்வீட்டை ரீட்வீட் செய்தது.

முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஜப்பானிய கணினி விளையாட்டு நிறுவனமான நின்டெண்டோவின் புகழ்பெற்ற கதாபாத்திரமான் மரியோ, புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரரான ஜேம்ஸ் போன்ற பெயர்களில் போலி கணக்குகள் தொடர்ந்தன. எலான் மஸ்க்குக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் பெயரிலும் ஒரு ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. இந்தக் கணக்குகள் அனைத்தும் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றவை.

பெரும்பாலான போலி கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன. எதற்கும் அலட்டிக்கொள்ளாத எலான் மஸ்க்கே இந்தக் களேபரத்தில், சற்று ஆடிப்போய்விட்டார்.

‘இப்படியான போலி கணக்கைத் தொடங்குபவர்கள், அது பகடியானது என்பதை வெறுமனே சுயவிவரப் பக்கத்தில் சொன்னால் மட்டும் போதாது. பெயரிலேயே பகடியானது என்பது சேர்க்கப்பட வேண்டும்’ என்று கெஞ்சியிருக்கிறார் எலான் மஸ்க்.

ஏற்கெனவே, அவரது குழப்படி நடவடிக்கைகளால் கிலேசமடைந்த ட்விட்டரின் முக்கியமான விளம்பரதாரர்களான ஜெனரல் மோட்டார்ஸ், ஆடி, ஜெனரல் மில்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தத் தளத்தில் தங்கள் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இன்னும் என்னென்ன குழப்பங்கள் நேருமோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE