ஒரு வழியாக தன் மீதான படுகொலைத் தாக்குதல் தொடர்பாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை பதிவை சாதித்திருக்கிறார் இம்ரான் கான். ஆனால் அவர் வலியுறுத்தியபடி அதில் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் பெயரை சேர்க்க போலீஸார் மறுக்கவே, மீண்டும் நீதிமன்ற உதவியை நாடப்போவதாக அறிவித்திருக்கிறது இம்ரான் தரப்பு.
முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த வியாழன்று, ஆளும் ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராகவும் புதிய தேர்தல் நடத்த வலியுறுத்தியும் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கிய பிரம்மாண்ட பேரணியை தொடங்கினார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேரணியை முன்னெடுத்து சென்ற இம்ரான் கான் மீது மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இம்ரானுக்கு குறிபார்த்த துப்பாக்கி குண்டுகள் அவரது கால்களில் பாய்ந்தது. பலத்த காயமடைந்த இம்ரான் உடனடியாக லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது கால்களில் மொத்தம் 4 குண்டுகள் பாய்ந்ததாக அங்கிருந்தபடி அளித்த பேட்டியில் இம்ரான் தெரிவித்தார்.
தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமைச்சர் ரானா சனவுல்லா, ராணுவ உயரதிகாரி ஃபைசல் நசீர் உள்ளீட்டோர் மீது இம்ரான் கான் குற்றம் சாட்டினார். படுகொலை முயற்சி தொடர்பான காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலும் அவர்களின் பெயர்களை சேர்க்க வலியுறுத்தினார். இம்ரான் கானின் கட்சியே பஞ்சாப் மாகாணத்தை ஆண்டபோதும், பெரிய இடத்து விவகாரம் என்று எஃப்ஐஆர் பதிவு செய்வதில் போலீஸார் இழுத்தடித்தனர்.
காவல்துறையின் மெத்தனத்தை கண்டித்து பாக். உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் தரப்பு முறையிட்டது. நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து ஒருவழியாக எஃப்ஐஆர் பதிவானது. ஆனால் இம்ரான் குற்றம்சாட்டிய பிரதமர் உள்ளிட்ட பெயர்கள் அதில் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து மீண்டும் நீதிமன்ற உதவியை நாடப்போவதாக இம்ரான் தரப்பு இன்று(நவ.8) அறிவித்திருக்கிறது.
’ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்வதில் நாட்டின் முன்னாள் பிரதமருக்கே இந்த நிலைமை என்றால் சாமானியர்கள் கதி என்னாகும்’ என்று இந்த நிலவரத்தையும் மறக்காது அரசியலாக்கி உள்ளார் இம்ரான் கான். இதனிடையே இம்ரான் இன்றி நவ.10 அன்று மீண்டும் பேரணி தொடங்க இருக்கிறது. குண்டடிபட்ட காலுடனே பேரணியில் பங்கேற்று அனுதாப அலையை அள்ள இம்ரான் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிரான ஆபத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து இம்ரானின் மருத்துவமனை வாசம் தொடர்கிறது.
புற்றுநோய்க்கு உள்நாட்டில் உரிய சிகிச்சை கிடைக்காததால் பரிதாபமாக இறந்த தனது தாய் சௌகத் கானின் நினைவாக இம்ரான் கட்டமைத்த மருத்துவமனைகளில் ஒன்றில்தான் இம்ரானுக்கான சிகிச்சை தொடர்கிறது. மருத்துவமனை கட்டுவதற்காக நிதியும் ஆதரவும் சேகரிக்க முற்பட்டதே இம்ரான் கானை சமூகப்பணிக்கும் அதைத் தொடர்ந்து அரசியலுக்கும் இழுத்தது. தாய் சௌகத் கான் பெயரிலான அதே மருத்துவமனையில் இருந்தே அடுத்த அரசியல் இன்னிங்ஸை தொடங்குகிறார் இம்ரான் கான்.