மர்லின் மன்றோவுக்கு அமெரிக்க எழுத்தாளர் அனுப்பிய அசத்தல் கடிதம்: ட்விட்டரில் பகிர்ந்த சசி தரூர்

By காமதேனு

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தோற்றாலும் வழக்கம்போல குஷியாகவே இருக்கிறார் சசி தரூர். ஆங்கில அறிவு, உலக நடப்புகள் குறித்த புரிதல்கள் என அவரது சமூக வலைதளப் பதிவுகள் சகஜமாகவே தொடர்கின்றன. அந்த வகையில் நேற்று அவர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ஒரு பழைய கடிதம் கவனம் ஈர்த்திருக்கிறது.

அந்தக் கடிதம் எழுதப்பட்டது புகழ்பெற்ற நடிகை மர்லின் மன்றோவுக்கு. எழுதியவர் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டெய்ன்பெக். 1962-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்.

ஹாலிவுட்டின் கனவுக்கன்னியான மர்லின் மன்றோவுக்கு ஏகப்பட்ட காதல் கடிதங்கள் எழுதப்பட்டன. நட்பின் அடிப்படையில் பல பிரபலங்களும் கடிதம் எழுதினர். அவற்றில் சில கடிதங்களைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருந்தார் மர்லின் மன்றோ. அவற்றில் ஒன்று ஜான் ஸ்டெய்ன்பெக் எழுதிய கடிதம்.

ஜான் ஸ்டெய்ன்பெக்

அப்படி என்ன விசேஷம் அந்தக் கடிதத்தில்?

1955 ஏப்ரல் 28-ல் எழுதப்பட்ட கடிதம் அது. விஷயம் இதுதான்! ஜான் ஸ்டெய்ன்பெக்கின் மனைவியின் தம்பி (மைத்துனன்!) ஜான் அட்கின்ஸன் மர்லின் மன்றோவின் தீவிர ரசிகன். டெக்சாஸில் வசித்துவந்தான். அவனுக்காக ஆட்டோகிராப் போட்ட புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுத்தான் அந்தக் கடிதத்தை எழுதினார் ஜான் ஸ்டெய்ன்பெக். அவனது பெயருக்கு, தனது முகவரிக்கு அனுப்புமாறு அதில் கேட்டுக்கொண்டிருந்தார். சாதாரண விஷயம்தான். ஆனால், எழுதப்பட்ட விதத்தில்தான் மர்லின் மன்றோவின் மனதில் அந்தக் கடிதம் இடம்பெற்றது.

மர்லின் மன்றோ

‘அன்புள்ள மன்றோ, நான் உங்களைச் சந்தித்த விஷயத்தை சமீபத்தில் டெக்சாஸ் சென்றிருந்தபோது, ஜானிடம் என் மனைவி சொல்லி ஒரு பெரும் பிழையைச் செய்துவிட்டாள். அதை அவன் நம்பவில்லை. ஆனாலும் அது பொய் என்று எடுத்துக்கொண்டால்கூட என் மீதான மரியாதை அவனிடம் அதிகரித்திருக்கிறது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட ஜான் ஸ்டெய்ன்பெக், ‘சிந்தனைவயப்பட்ட போஸில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருந்தால் பரவாயில்லை. அதில் அவனது பெயரை எழுதி அனுப்பினால், அவன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பதாக அர்த்தமாகும்’ என்று குறிப்பிட்ட அவர், கடைசியாகக் குறிப்பிட்டதுதான் நச் வாக்கியம்: ‘ஏற்கெனவே அவன் உங்களது அடிமை. நீங்கள் புகைப்படம் அனுப்பினால் அவன் எனக்கும் அடிமை ஆகிவிடுவான்!’

மர்லின் மன்றோ அதற்குப் பதில் எழுதினாரா தெரியவில்லை. ஆனால், 1962-ல் மர்லின் மன்றோ மறைந்தபோது, அவரது எஸ்டேட் முதல் அந்தக் கடிதம் வரை பல முக்கியமான அம்சங்கள் அவருக்கு நடிப்புப் பயிற்சி அளித்த லீ ஸ்ட்ராஸ்பெர்க் வசம் ஒப்படைக்கப்பட்டன. 1982-ல் ஸ்ட்ராஸ்பெர்க் மறைந்த பின்னர் அவை அனைத்தையும் அவரது மனைவி பராமரித்துவந்தார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. ஜான் ஸ்டெய்ன்பெக் எழுதிய அந்தக் கடிதம், 2016-ல் 3,250 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

அந்தக் கடிதத்தைப் பகிர்ந்திருக்கும் சசி தரூர், அதை ஒரு மாஸ்டர்பீஸ் என்று வர்ணித்திருக்கிறார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE